கொளுத்துவோம்

கொளுத்துவோம்
மடமையைக் கொளுத்துவோம்
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

மக்காத உரமாய் மண்ணில் தோன்றி
மழலை பூவாய் மலர்வாள் அவள்

அம்மா என்பாள்
அப்பா என்பாள்
ஆழிப்பெருக்காய்
அன்பினை பொய்யும்
அழகுப்பெட்டகம் அவள்

பருவத்தில் பூப்பெய்வாள்
வெட்கமும் கொள்வாள்
பட்டங்களை மகுடங்களை
புன்னகையில் ஏந்திச்செல்வாள்

சாதிக்க பிறந்தவள் அவள்
சாதனைகள் புரிந்தவள் அவள்
சாதுவாய் சரித்திரம் படைக்கும்
சக்தியும் அவள்

மகத்தான கருவினை
மனதாற சுமப்பவள் அவள்
தாளா துயர் தாங்கி
தன்னுயிரை பிரிப்பாள் அவள்

வெண்குருதி பாலூட்டி
வெளிர் பஞ்சாய் தாலாட்டி
மழலை புன்னகையில்
மத்தாப்பாய் மலர்வாள் அவள்

அவளே தான்
ஆதியும் மீதியும் அவளே தான்
பெண்மையும் அவளே தான்
அத்துனையும் அவளே தான்

கண்காட்சி பொருளல்ல அவள்
கொண்டாடப்பட வேண்டியவள்

காமத்தசையல்ல அவள்
கைகோர்த்து புறங்காத்து
போற்றப்பட வேண்டியவள்

போதும் தோழா
கொளுத்துவோம்
மன்னர் கால மக்கிப்போன
மடமையை கொளுத்துவோம்

இச்சையை கொளுத்துவோம்
இம்சையை கொளுத்துவோம்
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

Share